மொழி : English / தமிழ்
ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் அருளுரைகள்
108 என்பதில் தமிழ் வருஷங்கள் = 60, நட்சத்திரங்கள் = 27, இராசிகள் = 12, கிரகங்கள் = 9 ஆக மொத்தம் = 108.
62 வயதுக்கு மேல்தான் அதிகமாக கோபம் வரும். இரத்த வீக்கம் குறைய குறைய கோபம் அதிகம் வரும். எனவே வயதான பெற்றோர்களிடம் அவர்கள் கோபப்படும்போது நாம் அதிகமாக பேசக்கூடாது.
மரணப்படுக்கையில் இருக்கும்போது கோரோசனத்தை தண்ணீரில்போட்டு பாலில் வெள்ளி காசு போட்டு சிறிது நேரம் பொறுத்து கோரோசனத்தையும் பாலையும், சுவாமிகளை நினைத்து கொடுத்தால் 3.75 நாழிகை உயிருடன் இருப்பார்கள்.
அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்.
அடுத்தவருக்கு கெட்டது எப்போதும் செய்யாதே.
அந்த காலத்தில் குழந்தை இல்லாத பெண்களும், குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் நல்ல நாளில் ஏழைகளை கூப்பிட்டு விருந்து படைத்து அவர்களே பரிமாறி பின் மடியேந்தி அவர்கள் சாப்பிடும்போது அவர்கள் எச்சில் கையாலேயே சிறிது சாதம் வைக்க சொல்லி வாங்கும் சாதத்தை ஓர் இடத்தில் பத்திரப்படுத்தி பின் எச்சில் சாதத்தை போட்டவர்களின் சாப்பிட்ட இலைகளை எடுத்துபோட்டு விட்டு பத்திரப்படுத்திய சாதத்தை தரையில் கொட்டி சாப்பிடுவார்களாம். கையில் எடுத்து சாப்பிடுவதைவிட மண்டி போட்டு கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வாயாலே எடுத்து சாப்பிடுவது விசேஷம். குழந்தை இல்லை என்று பிரம்மன் எழுதி இருயதாலும் பிரம்மாவின் தலை எழுத்தையே மடிப்பிச்சை மாற்றிவிடும்.
அன்னதானத்தின் போது பந்தி பரிமாறுவதைவிட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் புண்ணியம்.
அன்பால் எதையும் வாங்கலாம், அதிகாரத்தால் எதையும் வாங்க முடியாது.
அன்பு மட்டுமே அழியா சொத்து.
அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் செய்யும் பிள்ளை என்றும் முன்னுக்கு வருவான்.
அறுபடை வீடுகளில் கடைசி படைவீடு பழனியாகையால் இங்குதான் உனக்குத் தேவையான வரங்கள் கிடைக்கும்.
அள்ளப்போனாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
அழகு, அகங்காரம், தற்பெருமை, ஆணவம், கௌரவம் வந்தால் குணம் கெட்டு கேடினைத் தேடிக் கொள்கிறார்கள். நன்மையும் என்றும் பெற முடியாது.
அவனவன் செய்த வினையை அவனவன் அனுபவித்துதான் ஆக வேண்டும்.
ஆடி, ஆவணியில் அதிகமாக காற்றடித்தால் அந்த வருட பருவமழை நன்றாக இருக்கும்.
ஆடிமாத தொடக்கத்தில் வீட்டில் ஒரு சிறிய மண் சட்டியில் நவதான்யங்களை போட்டு முளைப்பாரி வளர்த்து ஆடி பதினெட்டு அன்று கொடுமுடிக்கு சென்று ஆற்றில் முளைப்பாரியைவிட நமது கஷ்டங்கள் ஆற்றொடு போய்விடும்.
ஆடியில் பெருங்காற்று அடித்தால் அடைமழை பொழியும்.
ஆண்கள் விழுந்து கும்பிட வேண்டும். கும்பிடும்போது நெஞ்சு (மார்பு) தரையில் பட வேண்டும். குப்புற படுத்து வணங்க வேண்டும். பெண்கள் முட்டிக்கால் நெற்றி தரையில் படும்படி கும்பிட வேண்டும்.
ஆற்றை நாணல் கெடுக்கும்.
இடாதவனுக்கு இட்டு காட்டு.
இடிக்கிற வானம் மழை பொழியாது.
இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறது என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும். எல்லாம் போய்விடும்.
இப்பொழுது இருந்தே கோபத்தை குறைத்து கொள் எந்த நேரத்திலும் கோபமில்லாமல் சாந்தமாகவே இருக்க வேண்டும். ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை. இதுவும் கடவுள் செயல் எதுவும் நல்லத்திற்கே என்று இரு.
உலகத்திலேயே அன்னதானம் ஒன்றுதான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்கக்கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது.
வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்குப் போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டி வந்தால் போதுமானது.
கோயிலுக்குச் சென்றால் நல்லெண்ணெய் கொண்டு செல்ல வேண்டும்.
உலகத்தை காக்கும் கடவுளின் பாதம், உலகம் முழுவதும் பட்டிருக்கும். ஆகையால்தான் அந்த பாதத்திற்கு முதல் வணக்கம். முதலில் காலுக்கு உதிரி பூக்கள் சூடிய பிறகு தான் சிரசில் பூ வைக்க வேண்டும்.
உழுகிற காலத்தில் நன்கு உழுதால் அறுவடை செய்யும் காலத்தில் ஆனந்தமாக அறுவடை செய்ய முடியும்.
எது வந்தாலும் வந்து விட்டு போகட்டும் என்று இருந்தால் எந்த நோயும் வராது. கெட்ட நேரத்தில் தணிந்து சாந்தமாக போக வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும்.
எதை நம்புகிறமோ அதுதான் நம்மை காப்பாற்றும்.
எந்த நேரமும் கோபமில்லாமல் சாந்தமாக இருக்க வேண்டும். தற்பெருமையும் கௌரவமும் இருக்க கூடாது.
ஒருவன் ஒரு தெய்வத்தை வழிபடும்போது எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதற்கு நீ செய்யும் சேவையை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்துவது தவறு. தெய்வம் ஒன்றும் செய்யவில்லையே என்று நினைக்ககூடாது. தெய்வம் சோதனை செய்யும். உனக்கு நல்ல நேரம் வரும்போது வட்டியுடன் சேர்த்து உனக்கு நன்மை செய்யும்.
ஒருவருக்கு ஞானம் வருவதற்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாது, தனக்கு என்று எதுவும் கேட்க கூடாது, நான் என்ற சொல் வரக்கூடாது, யாரையும் சிஷ்யன் என்று கூறக்கூடாது.
ஒழுக்கம் வளர்ப்பவர்கள் பெண்கள்.
ஓடிப்பிழைத்தாலும் திசை இருக்க வேண்டும்.
கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் மரம் ஏறி கை விட்டவனும் ஒன்று.
குடும்பத்தை மூடி வாழும் தத்துவம் நல்லது.
கடவுள் : காற்று - தகப்பன், நீர் - தாய், காற்றும் நீரும் சேர்ந்தது நெருப்பு (ஜோதி) சிவனும், சக்தியுமே கடவுள். அதற்குமேல் ஒன்றுமில்லை. சிவம் என்பது அருவநிலை, சக்தி என்பது உருவ நிலை. சிவ வழிபாடு அருளுடன் பொருள் உண்டாகும். சக்தி வழிபாடு பொருட்செல்வம் மட்டும் அதிகம் அளிக்கும். சிவ வழிபாடு சிறந்தது. விநாயகர், முருகர், சிவன் மூன்றுமே சிவ வழிபாடு. சிறந்தது முருகன் வழிபாடுதான்.
கட்டை இருக்கும் வரை இருந்து விட்டு ஆத்மா ஒரு இம்சை இல்லாமல் பிரிவதுதான் புண்ணியம். நோய் நொடி இல்லாமல் இருப்பது புண்ணியம்.
எதை செய்தாலும் இது நமது அல்ல என்று செய்ய வேண்டும். கடவுள் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும்.
கண்டதை பேசலாம் காணாததை பேசக்கூடாது.
கன்னத்தில் கை வைத்தால் தரித்திரம் கஷ்டம் வரும்.
கரு உருவான முற்றேமுக்கால் நாழிகைக்குள் யாரை பார்த்தார்களோ அவர்களுடைய பிம்பத்துடன் குழந்தை சாயல் இருக்கும்.
கருடனை பார்த்தால் தலைக்கு மேல் இருகைகளையும் தூக்கி கும்பிட வேண்டும்.
கருடனை பார்த்தால் மகாவிஷ்ணுவை பார்ப்பது போன்று.
கருடன் வந்தால் நம் தோஷங்கள் நம்மைவிட்டு விலகுவதாக அர்த்தம் கருடபத்து படித்தால் கருடன்கள் நிறைய வரும்.
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னாலே வரும்.
கவரிமானிடம் இருந்து கிடைப்பது கஸ்தூரி.
கஷ்டத்தை அனுபவித்த பிறகுதான் நன்மை ஏற்படும்.
கஷ்டத்தையும் கசப்பையும் இனிப்பாக நினைக்க வேண்டும்.
கஷ்டம் வரும் காலங்களில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
காசிக்கு சென்றால் பாவம் போகுமா ? காசிக்கு போனாலும் கர்மம் தீராது செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டாலே போதுமானது.
காமாட்சி அம்மன் விளக்கில் இரண்டு திரிகள் போட்டு விளக்கு ஏற்றினால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
சூரியன் உதிக்கும் முன்னும், சூரியன் அஸ்தமனத்திற்கு முன்பும் (கால் மணி நேரம் முன்) ஆமணக்கு எண்ணெய் விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கிடைக்கும்.
காலை நான்கு மணி முப்பது நிமிடங்களிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்தம். எந்த நல்ல காரியமும் செய்யலாம் எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை.
காலையில் எழுந்தவுடன் யார் கண்ணிலும் விழிக்காமல் சுவாமிகளை நினைத்துக் கொண்டு தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க கோபம் வருவது குறையும். கோபம் வராது. லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
கிணற்றில் ஆமை இருந்தால் லஷ்மி கடாட்சம் இல்லை.
குப்புற பிறந்த குழந்தை அதிர்ஷ்டகார குழந்தை. செல்வமாக வாழ்வார்கள்.
குயில் கூவும் இடத்தில், நீர்வளம் மிகுந்து இருக்கும்.
மயில் கூட்டங் கூட்டமாக உள்ள இடத்தில் ஸ்ரீ முருகன் சக்தி மிகுந்து இருக்கும்.
குரு என்பவர் ஞானக்காரகர். உனக்கு நல்லது கெட்டதுகளை சொல்லக்கூடியவர்.
இறைக்கின்ற கிணறு ஊறும். கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு வந்து சேரும்.
குறையில்லாத மனிதனே கிடையாது. சாது சந்நியாசி இவர்களுக்கு கஷ்டம் அதிகம் இருக்கிறது. குறையுடன் கடவுள் பிறப்பித்தார். குறையில்லாமல் யாரும் பிறக்கவில்லை.
குலைக்கிற நாய் கடிக்காது. வேட்டைக்கு ஆகாது.
குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன்மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும். குங்கும சாயத்தை குழந்தைகளுக்கு பூச திருஷ்டி விலகும். பிரதி ஞாயிறுதோறும் செய்யவும்.
குழந்தைகளுக்கு வெள்ளாட்டு பால் கொடுத்தால் நோய் வராது.
கூடி கெட்டவர்கள் யாருமில்லை பிரிந்து கெட்டவர்கள் உண்டு.
கெட்டவனுக்கு நல்லது கெட்டது புரிய வைத்தால் நல்லவனாக மாறலாம்.
கொடுமுடி பார்க்காதவன் கொடும்பாவி, மதுரை பார்க்காதவன் மா பாவி. காசியில் நீராடுவதை விட கொடுமுடியில் நீராடுவது விசேஷம்.
கொண்டுக் கொண்டாலும் கொடுத்து விட்டாலும் சொல்லப்படாது.
கோ தரிசனம் பாவ விமோசனம், சாது தரிசனம் பாவ விமோசனம்.
கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்.
கோயிலுக்கு சென்றால் கீழே உட்கார வேண்டும். அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.
கோயிலை சுற்றி வந்தால் கெட்டது நீங்கும்.
சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல் கஷ்டத்திலும், சந்தோசத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்க வேண்டும். ஆனந்தம், கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார்.
திருஅருட்பா, நடராஜர் பத்து எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
சந்தோசம்தான் கடவுளின் ஆகாரம்
சாதகமான சூழ்நிலையே, பாதகமான சூழ்நிலையோ, எது நேர்ந்தாலும் இறைவனை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும்.
சாதாரண மனிதனின் மூச்சு காற்று ஒரு வினாடிக்கு 18 அடி சுருதி சென்று வரும். கடவுளுக்கு ஒரு லட்சம் அடி சென்று வரும். துறவிக்கு ஒரு கோடி அடி சென்று வரும்.
சாப்பிட்டவர்கள் உப்பு இல்லை என்று சொல்லப்படாது. அப்படி சொன்னால் செய்தவர்கள் மனம் புண்படும் எனவே சொல்லப்படாது.
சித்தர்கள் அந்த காலத்தில் அறிவாளிகளாக இருந்தார்கள். மக்களது நோய் நொடிகளை கண்டு, அவர்களை காப்பாற்றுவதற்காக மணி மந்திரங்களையும் மருத்துவ (மூலிகைகளினால்) முறைகளையும் கண்டு கூறினர். நான் என்ற வார்த்தை அவர்கள் வாயில் வராது.
சிவ பூஜை செய்தால் மன அமைதி கிடைக்கும். தகப்பனுடன் தாய் இணைந்து விடுகிறாள்.
சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசீர்வாதமும் அவரது தரிசனம் எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும் கிடைக்கவேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
மனதிற்குள் எப்போதும் ஓம் சற்குறு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கும் நேரம் தவிர.
சுவாமிகளை நினைத்து ஜபம் செய்தால் கருடன் வரும்.
சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள் 1. சுண்டூர், 2. திருப்பதி மலை, 3. மதுரை திருப்பரங்குன்றம், 4. வெள்ளியங்கிரி, 5. திருச்செயதூர், 6. பழனி
சுவாமிகள் கையை தூக்கி காண்பிப்பது மக்களுக்கு அமைதி வேண்டும் என்பதே.
செல்வம் வரும்போது செருக்கு வரக்கூடாது.
செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்த பிறகு கல்லாவில் இருந்து காசை எடுத்து கொடுக்கக்கூடாது. தனியாக வைத்து செலவு செய்யலாம். கீழே விழுந்த காசை யாருக்கும் கொடுக்கக்கூடாது.
செவ்வாய்கிழமை லட்சுமி பிறந்த நாள், முருகனுக்கு உகந்த நாள். செவ்வாய் கிழமை விரதம் இருப்பது மிக விசேஷம். இரண்டு வருஷம் தொடர்ந்து இருந்தால் நமக்கு கெட்டது செய்பவர்களை திருப்பிவிடும்.
சேற்றில்தான் செந்தாமரை முளைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை விவசாயத்துக்கு நல்லது.
ஆணுக்குச் சக்தி வலது கை பெருவிரலும் வலது கால் கட்டை விரலிலும் இருக்கும். பெண்ணிற்குச் சக்தி தலைமுடி, மூக்கின் நுனி மார்பின் நுனி இம்மூன்று இடங்களிலும் இருக்கும். எனவே பெண்கள் கூந்தலை வெட்டுதல் கூடாது.
தற்பெருமையும் கௌரவமும் இருக்க கூடாது.
எலி வெள்ளாமையை கெடுக்கும்.
எளியவனுக்கு (ஏழைக்கு) ஆசை வார்த்தை சொல்லாதே. பணக்காரனுக்கு வைத்தியம் சொல்லாதே.
எவனாயிருந்தாலும் சரி குருவாயிருந்து நாலு சீடர்களை வைத்திருந்தாலும் சரி கை நீட்டி காசு வாங்கினாலும் சரி அவன் துறவி கிடையாது. சாமியார் கிடையாது. அவன் சம்சாரியே.
ஒன்றை பிடித்தால் வலுவாக பிடித்து கொண்டு ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும்.
ஒரு சம்சாரி தன் மனைவி குழந்தைகளை நியாயத்துடன் தொழில் நடத்தி காப்பாற்றி, கடமைகளை சரிவர செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை 36 வருடங்கள் காட்டில் கடுயதவம் இருந்தாலும் அடைய முடியாது.
ஒரு சம்சாரி பாவம் செய்தால் மன்னிப்பு உண்டு. சாமியார்கள் பாவம் செய்தால் மன்னிப்பே கிடையாது. ஏழு ஜென்மத்திற்கும் மாடாய் பிறயது உழைக்க வேண்டும்.
ஒரு மனிதனுடைய சாப்பாடு அளவு முப்பத்திரெண்டு கையளவு தான்.
ஒரு லிட்டர் உப்புக்கு இருபது லிட்டர் தண்ணீர் (1:20) ஊற்றி கலந்து பூச்சி உள்ள இடத்தில் செடிகளில் தெளிக்க பூச்சிகள் மடியும். செடி செழிப்பாக விளையும்.
ஒரு வியாபார ஸ்தலத்தில் அமர்வது மேற்கு முகம் அல்லது தெற்கு முகம் பார்த்து அமர வேண்டும்.
நிலைக்கண்ணாடி பெரிய கால் விரல்களை பார்த்து புறப்பட்டால் போகும் காரியம் வெற்றியாகும்.
ஒருவனுக்கு நல்ல பெண் (மனைவி), வீடு, தண்ணீர் அமைந்தாலே போதும் கோடி நிம்மதி கிடைக்கும்.
கட்டை பிராணன் போகும் இடம்தான் சொர்க்கம்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போட சிறிய துணியில் நல்லெண்ணெய் விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன்மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும்.
காராம் பசுவிடம் இருந்து கிடைப்பது கோரோசனம்.
கேடு வரும் பின்னே மதிகெட்டு போகும் முன்னே.
கோபம் வரும் வீட்டில் சண்டை வளரும்.
கோயிலுக்கு சென்றால் கீழே உட்கார வேண்டும். அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.
சமையல் அறைக்கு மேற்கே பூஜை அறை இருக்க வேண்டும்.
சம்பாதிக்கும் பணத்தில் 5-ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும். ஒரு பங்கை சேமித்து வைக்கவும். மூன்று பங்கை செலவுக்கு வைத்துக் கொள்ளவும். சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும். தர்மம் செய்யும் பங்கு மறுஜென்மத்தில் உதவும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் அமாவாசை மிகவும் சிறந்தது. அன்று ஸ்ரீ விநாயகர், முருகன், சிவன் முதலான தெய்வங்களை வணங்குவதும் மகான்களைச் சென்று காண்பதும் புண்ணியமானது.
தங்கத்தில் அணிகலன் செய்வது எப்படி? தங்கமும், செப்பும் வேண்டும் இரண்டும் பக்கத்தில் வைத்தால் போதுமா? தங்கமும் செப்பும் உருக வேண்டும். இரண்டும் உருகி இணைந்தால்தான் அணிகலனாக மாறும். நாமும் இறைவனிடம் மனமுருகி அன்பு கொண்டு நம்பிக்கை வைத்து அருள் ஆசியை பெற வேண்டும்.
தட்டானிடம் சிக்கிய பொன்னும், செக்கானிடம் சிக்கிய மாடும் படு அவஸ்தைபடும்.
தர்மம் செய்தால் பிள்ளை கிடைக்கும்.
தர்மம் செய்யும்போது பொருள் நமது அல்ல. கடவுள் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும்.
தலைமுடியும், நகமும் உயிர் பொருள்கள். நெருப்பால் மட்டும் அழியும், மற்றது எதுவாலும் அழியாது.
தான் செய்த தவற்றை எல்லோருக்கும் முன் ஒத்துக்கொண்டால் அதுவே பரிவர்த்தனையாகும்.
தாயின் சக்திதான் ஜோதி.
தாய் தந்தை இறந்த நாளில் இரண்டு பேருக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும். மாட்டுக்கு அகத்தி கீரை கொடுக்க வேண்டும்.
தாய் மடியில் தங்கம் இருந்தாலும் தன் மடியில் தவிடாவது இருக்க வேண்டும்.
தாலி வாங்கக்கூட முடியாத ஏழைகளின் திருணத்திற்கு 5 பேர் சேர்ந்து தாலி வாங்கி கொடுத்தால் நல்லது. சுவாமிகள் இதனை எப்பொழுதும் கடைபிடிக்கச் சொல்லுவார்.
தினமும் பிள்ளையார் கோயிலுக்கு சென்று போன ஜென்மத்தில் செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு கேட்டு மூன்றுமுறை கோயிலை சுற்றி வர முன் ஜென்ம பாவங்கள் நீங்கும். பிள்ளையாரும், துறவிம் (நம் சுவாமிகள்) ஒன்றுதான்.
திருடன், அபசாரி என்ற பெயர் வாங்கப்படாது.
துன்பத்தை கொண்டே இன்பத்தை அடைய வேண்டும், இன்பத்தையும் துன்பத்தையும் கை, கால்கள் நல்லபடியாக இருக்கும்பொழுதே எனக்குக் கொடு என்று சுவாமியைப் வேண்டிக் கொள்ள வேண்டும்.
துறவி அச்சத்தைத் துறந்தால்தான் ஞானக்கண் திறக்கும்.
துறவி சாபம் கொடுத்தால் ஊரே உருப்படாமல் போய்விடும். சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் சரியாகும். துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால்தான் மாற்றமுடியும்.
தொழில் செய்பவன் சிக்கனமாக இருக்க வேண்டும்.
நன்மையை உடனே கண்டுபிடிக்க முடியாது. தீமையை உடனே கண்டுபிடிக்க முடியும்.
நம்பிக்கைதான் தெய்வம். என்ன துன்பங்கள் வந்தாலும் உயிரே போவதானாலும் நம்பிக்கையை சிறிதும் இழக்கக்கூடாது.
நல்ல உடம்பிற்கு நாலு சொம்பு தண்ணீர்
நல்ல பாம்பு வாசம் செய்தால் இலட்சுமி கடாட்சம். விபூதி போட்டு கற்பூரம் கொளுத்தினால் போய்விடும்.
நல்லது செய்யும்போதும், நன்மை செய்யும்போதும், தர்மம் செய்யும்போதும், அடுத்தவனுக்கு தெரியக்கூடாது. தெரிந்தாலும் நாம் சொன்னாலும் புண்ணியம் எல்லாம் போய்விடும்.
நாக்கு இல்லாத மிருகம் முதலை.
நான் எனது என்று சொல்லாதவன் எவனோ அவனே துறவி . தனக்கு என்று மடம் வைத்திருப்பவன், அடுத்த வேளைக்கு உணவினைச் சேர்த்து வைத்திருப்பவன், பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பவன் துறவி ஆகமாட்டான். அவன் பொய்யன். மக்கள் ஏமாற்றுபவன்.
நாம் கெட்டது செய்யாமல் இருந்தால் அதுவே புண்ணியம்.
நாம் செய்யும் நன்மைகள் தான் நம்மையும் குடும்பத்தையும் காக்கும்.
நாயாட்டம் உழைத்து ராஜா போல் சாப்பிட வேண்டும், ராஜா போல் சும்மா இருந்தால் பின்னல் நாய் போல் சாப்பாட்டிற்கு அலைய வேண்டும்.
நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரிபார்க்க வேண்டும்.
நாஷ்டா கடையில் லாபம் உள்ளது போல் வேறு எந்த வியாபாரத்திலும் லாபம் கிடைக்காது. மளிகை கடை, ஹோட்டல், ஜவுளி கடை வைத்து ஒருவன் முன்னேறவில்லை என்றால் வேறு எதிலும் முன்னேற முடியாது.
நெருப்பும், தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லஷ்மி கடாச்சம் உண்டு.
பங்குனி மாதம் எல்லோருக்கும் விசேஷம்.
பசி சுவை அறியாது. நித்திரை சுகம் அறியாது.
பசி பட்டினி என்று வந்தால் சாப்பாடு போடவும்.
பத்து பேருக்கு சாப்பாடு போடுவதில் வரும் புண்ணியத்தில் பாதி சாப்பிட்ட இலையை எடுப்பவர்களுக்கு வந்து சேரும்.
பர்வத மலை துறவிகள் வாழ்ந்த இடம்.
பல கடவுளை கும்பிடாதே எல்லாம் குருவே, குருவே கடவுள் ஆவார்.
பழுப்பு அரச இலையில் கையிலை தைத்தால் அழகாக இருக்கும்.
பிச்சை எடுத்தாலும் தர்மம் செய்ய வேண்டும். சட்டி எடுத்து பிச்சை எடுத்தால்கூட நாய்க்கு போட்டால்தான் புண்ணியம்.
பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால் பாவம் வரும். காசு கொடுக்காதே சாப்பிட ஏதாச்சும் கொடு. காசை போட்டால் அவன் நல்லத்திற்கு செலவு செய்தால் பரவாயில்லை. அந்த காசில் குடித்தாலோ வேறு கெட்ட செயல்கள் புரிந்தாலோ அப்பாவம் நம்மைச் சேரும்.
பிரம்மாவின் தலை எழுத்தையே மாற்றக்கூடியவர் துறவி. துறவிக்கு கடவுளே கட்டுப்பட்டவர்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கம் பண்பாடு கற்பிக்க வேண்டும். தொழிலும் கற்று கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளை காலை நாலரை மணிக்கு எழுப்பி படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும்.
பிள்ளையாரும், துறவியும் இருவரையும் கும்பிட்டாலும், கும்பிடவில்லை என்றாலும் நல்லதே செய்வார்கள்.
புண்ணியத்திற்கு போவதை தடுப்பது பேராசை, பொருளாசை.
பூஜை அறையில் படுத்து தூங்க கூடாது.
பெண்களிடம் மன அமைதியும் தெய்வ நம்பிக்கையும் இருந்தால், கஷ்டம் உண்டாக்கும் சனீஸ்வரன் இடம் இல்லை என்று போய்விடுவார். போகும்போது கொடுத்து விட்டுப்போவார்.
பெண்கள் கட்டின கணவர் வீட்டை பெரிதாக நினைக்க வேண்டும். தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு எப்போதும் இருக்க வேண்டும்.
பெண்கள் பெரிய படிப்பு படித்தாலும் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
பௌர்ணமியில் ஒரு பொருளை வாங்கினால் சொத்துக்கு சிறப்பு.
மகத்துவம் இருக்கும் இடத்தில் கூட்டம் இருக்காது.
மக்களை திருத்தினாலும் சாமியார்களையும், மந்திரவாதிகளையும் திருத்த முடியாது.
மதியால் (குரு கடாட்சத்தால்) தெய்வ நம்பிக்கையால் பெரியதாக வருவதை சிறியதாக்கலாம். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விடும். மனோ நம்பிக்கை வேண்டும்.
மந்திரங்கள் எல்லாம் கரும காண்டம். மந்திரம் கற்றவன் எவன் உருப்பட்டு இருக்கிறான்? மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு? சம்சாரிக்கு மந்திரம் தேவையில்லை.
மந்திரம் கால் மதி முக்கால்.
மனதில் எப்போதும் சுவாமிகளின் நினைவு இருந்துகொண்டே இருக்க வேண்டும். மானசீக பூஜைக்கு பத்தியம் இல்லை.
மனிதனுக்கு நம்பிக்கைதான் முக்கியம். அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும். எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தால்தான் பலன் கிடைக்கும். முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு.
மனோ பூஜை பத்தியம் இல்லாதது எந்த நேரமும் கும்பிடலாம்.
மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனச்சாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது. அன்னதானம் செய்யும்போது ஆடம்பரம், விளம்பரம் இல்லாமல் ஏழைகளாகப் பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது. இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களை தந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.
யாதாகிலும் ஒன்று கெட்டது ஏற்பட்டால் நேராக சுவாமிகளிடம் சென்றால் சுவாமிகளே அதனை நல்லபடியாக முடிப்பார்.
யார் கைவிட்டாலும் கடவுள் மட்டும் கைவிடமாட்டார் என்ற திடமான வைராக்கியம் இருக்க வேண்டும். கடவுள் சோதனைகளை கொடுக்கும்போது மன நிம்மதி மன நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். எது நடந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும். ஆன்மாவால் கும்பிட வேண்டும். தைரியத்தை வைத்துதான் கஷ்டத்தை குறைக்க வேண்டும். இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும். எல்லாம் போய்விடும். கஷ்டம் வரும் காலங்களில் நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். நம்பிக்கைதான் தெய்வம் என துன்பங்கள் வந்தாலும் உயிரே போவதானாலும் நம்பிக்கையை சிறிதும் இழக்கக்கூடாது.
யார் வந்து தண்ணீர் குடிக்க கேட்டாலும் தண்ணீர் இல்லை என்று சொல்லப்படாது.
ராகு காலம் முடியும்போது செய்யும் காரியம் வெற்றியாகும் (முக்கால் பங்கு கழிந்த பிறகு)
வடலூர் மண்ணில் நாம் இருந்தால் நம் பாவங்கள் விலகும். அந்த மண்ணிற்கு அவ்வளவு மதிப்பு உண்டு.
வரப்பு தண்ணீரைக் கெடுக்கும், துரும்பு தண்ணீரைக் கெடுக்கும்.
வலது கால் சுண்டு விரலில் காப்பு கட்டி எடுத்த கீழா நெல்லி செடியை வேருடன் பிடுங்கி கட்டினால் சுகப் பிரசவம் ஆகும். பிரசவ அவதிப்படும் பெண் தன்னை மறந்த நிலையில் சிவ சிவா என்று உணரும் போது தாய் வேறு குழந்தை வேறாகிறது.
வலது கையில் வாங்கும் திருநீரை அப்படியே பூசிக்கொள்ள வேண்டும். இடது கையில் போடக்கூடாது, போட்டால் புண்ணியம் அந்த இடத்திலேயே போய்விடும். இல்லையென்றால் பேப்பரில் போட்டுக்கொள்ள வேண்டும். இடது கை கால் தாயின் சக்தி கொடுத்த புண்ணியத்தை வாங்கிக் கொள்ளும் பெண்கள் திருநீர் வாங்கும்போது எப்போதும் முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க வேண்டும்.
வாணியன் ஆசை கோணி கொள்ளாது.
வாத்தியார் சொல்லி கொடுப்பது சிறிய பாடம். பெரியவர்கள் வாக்கு பெரிய பாடம்.
விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். விதியால் வரும் சுகமும், விலகமுடியாத துக்கமும் வணக்கத்துடன் ஏற்கபட வேண்டியது.
விதியை யாராலும் தடுக்க முடியாது. விதி முடிந்தால் பாம்பு ஓடி வந்து கடிக்கும். விதியின் விளையாட்டு, கெட்ட நேரம் யாரையும் பிடித்துத் தள்ளும்.
வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்கள், தாங்களும் வீட்டில் குடியிருந்தால் மாடியில் இருப்பதே சிறந்தது.
வீட்டிற்குள் கடை வைக்கக்கூடாது.
வீட்டில் ஆஞ்சநேயர், குழலூதும் கிருஷ்ணன், வீரத்துடன் காட்சிக் கொடுக்கும் சக்தி. இராம லட்சுமணர் போன்ற படங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது.
வீட்டில் இருந்தாலும், கோயிலுக்கு போனாலும், கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று, நல்ல சுகத்துடன் வைத்திரும் என மனமாற வேண்டிவந்தால் போதுமானது. சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது.
வீட்டில் கிரகபிரவேசம், புதுக்குடித்தனம் போன்ற காரியங்கள் செய்யும்போது பிள்ளையார் கோயிலில் இருந்து உப்பு, தவிடு, சாணம் இம்மூன்றையும் சுமங்கலிப் பெண்கள் எடுத்துச் செல்ல வேண்டும். இருக்கும் இடத்தில் இருந்து மாறுபவர்கள் கிழக்கு, வடக்கு திசை நோக்கி செல்வது நல்லது.
வீட்டில் மூன்று கண்ணுள்ள கொட்டான்குச்சியில் திருஷ்டி பொட்டு வைத்து கயிற்றினால் கட்டி வைத்தால் யாருடைய திருஷ்டியும் ஒன்றும் செய்யாது.
வெந்தயம் நாலு, கொண்டைக்கடலை பதினைந்து இரவு ஊற வைத்து காலையில் பிதுக்கி சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட மூளை வளர்ச்சி அடையும் படிப்பு நன்கு வரும்.
வெள்ளாடு தோப்பை கெடுக்கும்.
வைத்தியம் செய்யும்போதும், வைத்தியர் மருந்து கொடுக்கும்போதும் நோய் சரியாகிவிட வேண்டும் என்று நினைத்து கொடுக்கவேண்டும். நோயாளியும் இந்த மருத்துவர் கொடுக்கும் மருந்தால் நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்போதுதான் நோய் குணமாகும். இருமனமும் இணைய வேண்டும்.